தடுமாறும் இளமை

இந்நாட்களில் தகவல் தொழிநுட்ப வளர்ச்சியினால் அளவுக்கு மிஞ்சின அறிவுத் தகவல்கள், போட்டி பொறாமை நிறைந்த உலகம், வாலிபப் பருவத்தின் உணர்வுகளை தூண்டத் துடிக்கும் பாலியல் தொல்லைகள்,  பின்தொடரத் தகுதியான சரியான முன்மாதிரிகள் இல்லாமை என பல்வேறு காரணிகளால், இன்றைய இளைஞர்கள் தடுமாறுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இளமையில் தடுமாற்றம் எதிர்காலத்தையும் தடுமாறச்செய்யும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் ஆலோசனைகளாக விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த (எபி. 11:32) சிம்சோனின் வாழ்க்கையிலிருந்து (நியாதிபதிகள் 13-16 அதிகாரங்கள்) சில காரியங்களைக் கற்றுக் கொள்வோம்.

சிறுவயதில் தேவனின் திட்டம்:

சிம்சோனின் பிறப்பு தேவதூதனால் அவனது பெற்றோர்களுக்கு முன்னறிவிக்கப் பட்டது. அதைக்  கேட்ட அவனது பெற்றோர் அவனை வளர்க்கவேண்டிய விதம் குறித்து அவரிடம் குறிப்பாக  வினவினர் (நியா. 13:8,12). அவன் தேவனுக்கென்று விசேஷமாக தெரிந்துகொள்ளப்பட்டவனாக நசரேய பொருத்தனை செய்துகொள்ள அழைக்கப்பட்டதால், அவன் தலையின் மேல் சவரன் கத்தி படலாகாது; அவர் திராட்சை ரசம், மதுபானம் பருகக் கூடாது; எந்த பிரேதத்தண்டையும் போகக்கூடாது; கர்த்தருக்கென்று பரிசுத்தமாயிருக்க வேண்டும். (எண். 6:3-7). நசரேய விரதம் அதை எடுத்துக்கொண்டோருக்கு அந்த குறிப்பிட்ட காலம் வரைக்குமே பொருந்துவதாக இருப்பினும் சிம்சோனுக்கோ அது அவனது பிறப்பு முதல் இறப்பு வரை கடைபிடிக்க வேண்டியிருந்தது (நியா. 13:7)

நம்முடைய பிறப்பு பெரும்பாலும் நம்  பெற்றோர்களுக்கு முன்னறிவிக்கப்படாததாக இருப்பினும் தேவனோ நம் ஓவ்வொருவரையும் குறித்து பொதுவாக மற்றும் குறிப்பான திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை பிள்ளைகளுக்கு உணர்த்தி அவர்களை அதற்கேற்ப தேவனுடைய வழிகளில் பயிற்றுவிக்கும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு. சிம்சோனின் சிறுவயது வளர்ப்பு விபரமாக கொடுக்கப்படவில்லையெனினும், அவனுக்கு சிம்சோன் என பெயரிட்டது, பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தது, கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவங்கியது குறித்து நியாதிபதிகள் 13:24,25 வசனங்கள் கூறுவதன் மூலம் அவனது பெற்றோர் தங்கள் கடமைகளை நிறைவேற்றினர் என கருதலாம். ஆனால் அவன் பிரச்சினைகளெல்லாம் வாலிபப் பருவத்தில் தான் ஆரம்பிக்கிறது.

வாலிபத்தில் தடுமாறும் நாட்டம்:

சிம்சோன் வாலிப வயதில் கண்களின் இச்சைக்கு அடிமையாகி தன் கண்களுக்குப் பிரியமான, அவ்விதம் தான் தெரிவு செய்த பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என தன் பெற்றோர்களிடம் அடம்பிடிக்கிறான். அவர்களும் அவன் சொற்படி செயல்பட்டனர். ஆனால் இறுதிவரை அவன் அவளை அடையவில்லை.  அவன் அடைந்த தடுமாற்றங்கள் யாவை?

முதலாவதாக, அந்நிய தேவர்களை வணங்கும் பெண்களை திருமணம் செய்வது தேவனுக்கு பிரியமில்லாத காரியம். (நியா. 3;6,7; 2 கொரி 6:14) இதில் தேவனுடையை சித்தத்தை அவன் மீறினான். இரண்டாவதாக, தான் தெரிவு செய்த பெண்ணையே மணம் முடிக்க பெற்றோர்களிடம் அடம்பிடிப்பதன் மூலம், அவனது பெற்றோர்களையும் மதிக்கத் தவறினான். மூன்றாவதாக, பெண்பார்க்கச் செல்லும் வழியில் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப் போட்டான். நசரேய அழைப்பை மறந்து திராட்சைத் தோட்டங்களிருகே சென்றது அவன் தன் அழைப்பை மீறிய செயல். இது மது அருந்திய பாவத்தை செய்யாவிட்டாலும் அதற்கான பாவ சோதனையான சூழ்நிலையை தனக்குத் தானே வருவித்துக் கொள்வது போன்றதாகும்.  நான்காவதாக, திருமணம் முடித்து திரும்பும் வழியில், சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான் (நியா. 14:8). இதுவும் அவனது நசரேய விரத்தைதை மீறிய செயல் (எண். 6:6).  ஐந்தாவதாக, செத்த சிங்கத்தின் உடலுக்குள்ளே இருந்த தேனை தானும் சாப்பிட்டு தனது பெற்றோர்களுக்கும் கொடுத்தபோது அவன் நடந்த உண்மையை உரைக்கவில்லை (நியா. 14:9).

ஆறாவதாக, திருமணத்தில்விருந்துநிகழ்ச்சி வழக்கமாக இருப்பினும் சிம்சோனுக்கு அது தகுதியானதல்ல. அவன் அந்த விருந்தில் மது அருந்தியதாக இல்லையென்றாலும், அந்த பாவ சோதனைச் சூழலில் அங்கு அவன் இருந்தது தான், அவனை அவசியமில்லாமல் பொழுதுபோக்காக விடுகதை சொல்ல, அதற்கான சன்மானம் அறிவிக்க, மனைவியின் நிர்ப்பந்தத்தால் அதன் புதிரை விடுவிக்க, பந்தயத்தில்  தோற்றுப் போய் 30 பேரைக் கொண்று அவர்கள் வஸ்திரங்களை உரிந்துகொண்டு  அவன் தான் விதித்த நிபந்தனையை நிறைவேற்ற, இதனால் கோபத்தில் மனைவியை விட்டுவிட்டு தகப்பன் வீட்டுக்குச் செல்ல, என மேற்கொண்டு பல்வேறு பாவங்களைச் செய்ய வழிவகுத்தது (நியா. 14;10-19). இறுதியில் திரும்பிவந்தால், கட்டிய மனைவியும் அவனுக்கு வாய்க்கவில்லை. ஏழாவதாக, இதற்குப் பழிதீர்க்க பெலிஸ்தியருக்கு சேதங்கள் விளைவிக்கும் செயலில் ஈடுபட, அவர்கள் பழிக்குப் பழிதீர்க்க அவன் மனைவியையும் தகப்பனையும் சுட்டெரித்தனர் (நியா. 15:1-6). 

எதிர்காலத்தில் பலிக்கும்  விளைவுகள்:

சிம்போனின் வாலிப வயது தடுமாற்றங்கள் அத்துடன் முடிந்து போகவில்லை. அதன் விளைவுகளை அவன் தொடர்ந்து அனுபவித்தான். பெலிஸ்தியரை பழிவாங்கி, தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டான் (நியா. 15:7,8). அவர்களும் இவனைத் தொடர்ந்து பழிதீர்க்க முயன்றனர். காசாவிலே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போக, உயிர்பிழைத்து வருவதற்கு பெரும்பாடு படவேண்டியதாயிற்று (நியா. 16:1-3). மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். எனவே வேசித்தனத்திற்கு விலகியோட வேண்டும்(I கொரி. 6:18).

இத்துடன் சிம்சோன்ன் திருந்தவில்லை. அதற்குப்பின்பு அவன் தெலீலாள் என்னும் ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அந்த சிநேகமே அவன் தன் அழைப்பை முற்றிலும் மறந்து, அவளது துரோகத்தினால் தன் வாழ்க்கையையே வெறுத்து தன் பலத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தி, அதானல் தன் பெலனை இழந்து மரணமடைய ஏதுவாக மாறியது (நியா. 16:19). இளமைக்காலத்தில் தன் கண்களின் இச்சையின்படி நடந்த அவனுக்கு தற்போது ஏற்பட்ட தெலீலாளின் சிநேகத்தினால் முதலில் அவனது கண்பார்வை பறிபோனது. தன் பெலத்தின் மீது பெருமை கொண்டெழுந்த அவனுக்கு இறுதியில் தலைக்குனிவு ஏற்பட்டு, அனைவருக்கும் வேடிக்கைப் பொருளானான். இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் என வேண்டியபோது கர்த்தர் பெலனருளின படியால் தன் ஜீவனையும் இழந்து தான் பெலிஸ்தியர்களை அழிக்க முடிந்தது (நியா. 16: 28-30). நசரேய விரதத்தை கொஞ்சம் கொஞ்சமாக மீறியபோது கர்த்தர் இரக்கம் பாராட்டி அவனை இருபது வருடங்களாக  தம் ஜனங்களை நியாயம் விசாரிக்க பெலப்படுத்தினார். அவன் அதனை முழுமையாக மீறி தலைமயிரை இழந்தபோதோ, மீறுதலின் பலனாக மரணத்தை தழுவினான்

சிம்சோனின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடம். ஒரு நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கையில் என்பது பொதுவான கூற்று. ‘நம் அமெரிக்க நாட்டின் எதிர்காலம் நமது இளைஞர்களின் கிறிஸ்தவப்போதனை பயிற்சியைச் சார்ந்துள்ளது  என்று ஒருமுறை கூறினார் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்.  அதுபோன்று, நாமும் நமது எதிர்காலம் கருதி  இளமையில் கிறிஸ்துவ போதனைகளை கற்றறிந்து தேவனுக்கேற்ற வழிகளில் நடக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு (I தீமோ.4:12).
Tags: