மன அழுத்தமும் ஆன்மீகமும்

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நாளிதழ்களிலும் இதர ஊடகங்களிலும் மன அழுத்தத்திற்கான (Depression) காரணங்களும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் விரிவாக அலசப்படுகின்றன. இருப்பினும் மனஅழுத்தம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்று தான். அறிவியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் மனிதன் பெருவளர்ச்சி கண்ட பின்னரும் எதிர்பார்த்த ஏதோவொன்று இன்னமும் கிடைக்காத ஏமாற்றம், தோல்வி, வெறுமை உணர்வில் மன அழுத்தம் அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. வான்மழை பொய்த்தால் வறுமையின் கொடுமை தாங்காமல் உயிர்விடும் விவசாயிகள் முதல் பணவீக்க ஏற்றத்தாழ்வினால் பதவியிழந்து பரிதவிக்கும் படித்தவர்கள் வரையிலும் அது எவரையும் விட்டு வைப்பதில்லை.

மன அழுத்தம்- ஒரு நோய்
மன அழுத்தம் என்னும் தாழ்வு உணர்வு (Low Mood) நிலை ஒரு நோயாக கருதப்படுகிறது. சாதாரணமாக உடல் நலக் குறைவினால் பொது மருத்துவரை அணுகுவோரில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவர்களின் மன அளவில் ஆரோக்கியமின்மையால் அவர்களது உடல் நலத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பது ஆச்சரியமான உண்மை.
உலகில் வாழும் நாம் அனைவருமே நோய் நொடியின்றி ஆரோக்கியமாகத் தான் வாழ விரும்புகிறோம்.

ஆரோக்கியமாயிருத்தல் என்றால் என்ன? ”நோய் நொடி எதுவும் இல்லாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் சமூக அளவில் ஒருவன் நன்றாயிருப்பதே ஆரோக்கியமாயிருத்தல்” என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. இந்த வரையறை ஒரு உன்னதமான நிலையாக இருப்பதால், இதன்படி உலகில் வாழும் அனைவருமே ஒருவிதத்தில் ஏதாவதொரு கட்டத்தில் நோயாளிகள் தான் என்பது வெளிப்படையான உண்மை.

மன அழுத்தத்தின் மதிப்பீடு
தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டி வெளியில் தெரிவது கொஞ்சமாக இருப்பினும் அதன் மொத்த உருவமோ மிகவும் பெரிதாக இருக்கும். அதுபோன்றே, மனநல மருத்துவர்களை நாடும் மன நோயாளிகளின்(Mental Disorders) எண்ணிக்கை 20 மில்லியானாக இருக்கும் பட்சத்தில், இதுதவிர மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 120 மில்லியன் என கணக்கிடப்படுகிறது. இவர்கள் உட்பட எதோவொரு விதத்தில் மனநலம் குன்றியோரின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டுகிறது. உலகில் ஆண்டுதோறும் 8, 00, 000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தமே காரணம்.

அறிகுறிகள்
அடிக்கடி தலைவலி, மயக்கம், எரிச்சல், மன உழைச்சல், தூக்கமின்மை, அஜீரணக் குறைபாடுகள், கவலை, அச்சம், சோர்வு, தனிமை, தாழ்வு மனப்பான்மை போன்றவை மன அழுத்தத்தின் சாதாரணமான அறிகுறிகள். மன அழுத்தத்தின் தொடர் தாக்குதலினால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, தோல் நோய்கள், ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் புண், ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உண்டாகின்றன.

கண்டறிவது எப்படி?
கவலை உணர்வுடன் உடம்பின் பெலன் இழந்த உணர்வு, தன்னம்பிக்கை இழந்து தனிமை உணர்வுடன் ஒதுங்கிக் கொள்லுதல், வழக்கமான பொழுதுபோக்குகளில் நாட்டமின்மை போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகள். அதுவே அதிகமாகி, அதிகாலையில் தூக்கமின்றி விழித்துக் கொள்ளுதல், வாழ்க்கையில் பிடித்தமின்றி வாழக்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற எதிர்மறை எண்ணம் அடிக்கடி மனதில் எழுதல், அதற்கான தற்கொலை முயற்சி போன்றவைகளில் ஏதோவொன்று காணப்பட்டால் தகுந்த அலோசகரையோ மனநல மருத்துவரையோ அணுக வேண்டும்.

காரணங்கள்
மன அழுத்தத்தை மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சுழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம் என இருவகையாக பிரிக்கலாம். இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பரவலாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய அடிப்படைக் காரணிகள். எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் திடீரென்றோ படிப்படியாகவோ தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.

சமாளிப்பது எப்படி?
சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்ப்படுகின்றன. இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.

இவைகள் தவிர ஆற்றுப்படுத்துதல் (Counseling), மனதிற்கான சிகிச்சை (Psychotherapy), சமூக ஆதரவு கட்டமைப்புகள் (Social Support), தேவைப்பட்டால் மருந்துகள் (Medications) என பல்வேறு வழிகள் உள்ளன.

ஆன்மீகத்தின் பங்கு
மனநல மருத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்றது ஒருகாலம். அப்போது மதம் மற்றும் ஆன்மீக காரியங்களே மன நோயாக கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுமுடிவுகள் ஆன்மீகம் மனிதனின் நோய் மற்றும் அதினால் எழும் மன உழைச்சலுக்கு தீர்வாக அமைவதை உறுதிப் படுத்துகின்றன. இதன் விளைவாக சமீப காலங்களில் உலகமெங்கிலும் பரவலாக பல நாடுகளின் மனநல மருத்துவத் துறையில் ஆன்மீகத்துக்கென்றே தனிபிரிவுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆன்மீகம் என்பது தனி ஒருவனின் தனிப்பட்ட அனுபவமாகும். எனவே கருத்து வேறுபாடுகளுக்கு அங்கு இடமுண்டு. அமைப்புகளுக்குட்பட்ட ஆன்மீகம் மதம் எனப்படுகிறது. ஆன்மீகம் அவ்விதம் அமைப்புகளுக்குட்படும் போது அதனுடைய நோக்கம் தவறி, எதிர்மறை விளைவுகளைத் தரும் அமைப்பாக மாறிவிடும் வாய்ப்புண்டு. அன்று தொட்டு இன்று வரையிலும் உலகில் மதத்தில் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது வரலாறு. இருப்பினும் தனி ஒருவனின் மனஅழுத்தத்தை கையாளுவதில் ஆன்மீகம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏப்படியெனில், மனதளவில் அரோக்கியமாக இருக்கும் ஒருவனது அடிப்படைப் பண்புகளை ஒருங்கே பக்குவப்படுத்தும் தன்மை ஆன்மீகத்துக்குத் தான் உண்டு. மற்ற முயற்சிகளும் ஓரளவுக்கு உதவக்கூடும். ஆனால் ஆன்மீகத்தின் உதவியினால் அதிக பலன் உண்டு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது… … எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).

மனநலத்தின் பண்புகள்
கீழ்க்கண்ட பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளவனைத் தான் முழுமையாக மனதளவில் ஆரோக்கியமாக இருப்பவனாக மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் அறிஞர்கள் கணிக்கின்றனர்:

1) தன்னைப் பற்றி தன்னிறைவோடு இருப்பவன்: தன்னைப் பற்றி மிகவும் உயர்வாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ எண்ணம் கொள்வதில்லை. இவர்கள் தமக்குத் தாமே உள்ளூர பிரச்சினைகள் (Internal Conflict)) எதுவுமின்றி, மனரம்மியமாய் திருப்தி உணர்வுடன் இருப்பர்; தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ள தயங்குவதில்லை.

2) அயலானைப் பற்றி தரமான சிந்தனை கொண்டவன்: அடுத்தவரை நம்பி ஏற்றுக் கொண்டு அரவணைத்து ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். இவர்கள் அயலான் மீது அக்கறை கொள்வதுண்டு.

3) வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவன்: வாழ்க்கையில் தமக்கென்று தகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்து அவர்களை நிறைவேற்றுவதில் துடிப்புடன் இருப்பர். அவைகளில் வரும் தடைகளை மேர்கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு உண்டு.

தன்னைப் பற்றி
ரோமர் 7:15-25 வசனங்களில் தனக்குதானே சம்மதியில்லாத ஒரு நிர்ப்பந்தமான மனுஷனின் நிலைமை விவரிக்கப்படுகிறது. ”இந்த மரண சரீரத்திலிருந்து யார் விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்”. என்பது பவுலின் அனுபவம். கலா. 5:22-23ன் படி, ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. தங்கள் மாம்சத்தையும் அதின் இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்ட கிறிஸ்துவினுடையவர்களுக்கே இது சாத்தியமாகிறது.

அயலானைப் பற்றி
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் ஊழியம் கொள்ளும்படி அல்ல, ஊழியம் செய்யவே வந்தார். ’உன்னிட்த்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் (கலா 5:14)’ என்கிறார் பவுல். ’கடவுளை மற; மனிதனை நினை’ என்ற கோட்பாடு, கடவுள் பெயரில் மனிதனுக்கு தீங்குசெய்த சிலரின் மீதுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடு. மற்றபடி கடவுளை நினைத்தவர்கள் தான் மனிதனைக் குறித்தும் அதிகம் நினைத்திருக்கிறார்கள் என்பது கண்கூடான வரலாற்று உண்மை. ஆன்மீகம் ஒருவனை அயலானிடம் அன்பு செலுத்தி அவர்களுடன் நல்லுறவு பேணும் பண்பாளனாக மாற்றுகிறது.

வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள்
வாழ்க்கையில் தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புகள் தோல்வியையும் ஏமாற்றத்தையும் தந்து இறுதியில் மன அழுத்தத்தைத் தான் கொண்டுவரும். தன்னைப் படைத்த தேவனின் சித்தத்திற்கு உட்பட்டு, வாழ்க்கையில் திட்டங்களை வகுத்துச் செயல்படும் போது அதனை நிறைவேற்றுவதில் தேவனுடைய உதவி கிடைக்கிறது. நோக்கம் உந்தும் வாழ்க்கையில் சவால்களை மேற்கொள்ளும் வலிமை கிடைப்பதால், எத்தகைய சூழ்நிலையிலும் மன அழுத்தத்தில் அழுந்தி விடாமல், சமாளித்துக் கொள்ளமுடிகிறது.

மனதிற்கான சிகிச்சையில் ஆன்மீகம்
மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் மனதிற்கு சிகிச்சையளிப்பது (Psychotherapy) ஒரு முக்கியமான சிகிச்சை முறையாகும். இந்த தொடர் சிகிச்சை மூலமாக காலப்போக்கில் படிப்படியாக மனதளவில் மாற்றம் ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதனையே பவுல், ரோமர் 12:2ல், ’நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பரிபூரண சித்தமும் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மருரூபமாகுங்கள்’ என்கிறார். மனதிற்கு சிகிச்சை மூலமாக ஓரளவுக்கு பலன் கிடைத்தால் போதும் என்பதுதான் எதிபார்ப்பு. ஆனால், இயேசு கிறிஸ்து, ’நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்’, என வாக்கு பண்ணியிருக்கிறார். எனவே மன அழுத்தத்திற்கு மருத்துவ மற்றும் உளவியல் முறைகளினால் கிடைக்கும் பலனைக் காட்டிலும் நிறைவான மற்றும் விரைவான பலன் ஆன்மீகத்தினால் கிடைக்கிறது.

இயேசு கிறிஸ்து ‘எங்கும் சுற்றித் திரிந்து பிணியாளிகளை சொஸ்தாக்கினார்’ என்று நாம் அறிவோம். ”அவர், பிரசங்கத்தைக் காட்டிலும் பிணியாளிகளை சொஸ்தமாகுவதற்கே அதிக நேரம் செலவளித்தார்” என்கிறார் ஒருவேதவல்லுநர். அந்த பிரசங்கங்கள் கூட பிணிக்குக் காரணமான ஆவி, ஆத்தும பிரச்சினைகளை முதலில் சரி செய்யவே என்பது அவரின் கருத்து. இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றி நமது ஆவி, ஆத்துமாவில் அரோக்கியமாக வாழும் போது மன அழுத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெற்று ’ஆரோக்கியம்’ கிடைப்பது நிச்சயம்.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3 யோவான் 2).