15 Dec ஆவி ஆத்துமா சரீரம்
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக; உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக ( 1 தெச. 5:23).
சிருஷ்டிப்பின் தேவன் ஐந்தாம் மற்றும் ஆறாம் நாட்களில் முறையே நீர்வாழ் மற்றும் தரைவாழ் ஜீவஜந்துக்களை தம் வார்த்தையினால் உருவாக்கிய போது ஆறாம் நாளில் மனிதனையோ தம்முடைய சாயலிலே தம்முடைய ரூபத்திலே படைத்தார் (ஆதி 1:26). தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7). அனைத்து ஜீவனுள்ள சிருஷ்டிகளிலும் மனிதன் விசேஷித்தவன். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன் என்கிறார் சங்கீதக்காரன் தாவீது (சங். 139:14). மனிதன் என்ற சிருஷ்டியின் அடிப்படை அம்சங்கள் குறித்து இங்கு நாம் ஆராயலாம்.
முழுவதும் (Complete):
ஆவி ஆத்துமா சரீரம் மூன்றும் உள்ளடங்கினால் தான், அவன் ஒரு முழுமையான மனிதன் என்பதை 1 தெசலோனிக்கேயர் 5:23 வசனத்திலுள்ள ’முழுவதும்’ (complete) மற்றும் ’முற்றிலும்’ (wholly) என்ற வாத்தைகளிலிருந்து நாம் விளங்கிக்கொள்ள முடியும். மற்ற உயிரினங்களுக்கெல்லாம் மரணத்துடன் முடிந்துவிடும் சரீரம் மட்டுமே இருக்கும் போது, மனிதனுக்கோ ”சரீரப்” பிரகாரமான மரணத்தைத் தாண்டியும் செயல்படும் ஆவி, ஆத்துமா போன்ற ”ஆவிக்குரிய” அம்சங்கள் காணப்படுகின்றன. ஆவியும் ஆத்துமாவும் கண்ணுக்குப் புலப்படாத அம்சங்கள். அவை இரண்டும் பல வசனங்களில் ஒன்றுக்கொன்று இணையாக / இணைப்பாக பயன்படுத்தப் பட்டாலும் அவை இரண்டும் வெவ்வேறு அம்சங்கள் தாம் என்பதை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்கின்றனர்; அவற்றை பிரித்தறிவதும் நம்முடைய மூளை அறிவுக்கு எட்டுகிற விஷயம் அல்ல (எபி. 4:12).
ஆவி (Spirit):
நமக்கு ’ஆவி’ என்னும் அம்சம் இருப்பினும் நாமோ ஆவி வடிவில் இல்லை. படைத்த தேவனுடன் ’ஆவிக்குரிய’ விதங்களில் நெருக்கமாக இடைபடவே மனித ’ஆவி’ கொடுக்கப்பட்டிருக்கிறது (யோவான் 4:24). உணரமுடியாத கண்ணுக்குத் தெரியாத மனிதனுடைய ஆவி தான், மனிதன் அவன் தன்னைக் குறித்த அறிவு, புத்தி, யோசனை, சிந்தனை, உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் போன்றவைகளை கொண்டிருக்கச் செய்கிறது (யோபு 32:8,18, 1 கொரி. 2:11).
ஒருவருடைய சரீர மரணத்திற்குப் பின்னர், அந்த ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகிறது (பிரசங்கி 12:7). மரணத்தின் போது மிருகங்களின் ஆவி தாழ பூமியிலிறங்கி அழிந்து விடுகையில் மனுஷனுடைய ஆவியோ உயர (தேவனிடத்திற்கு) ஏறிச் செல்கிறது (பிரசங்கி 3:21); தேவனே எடுத்துக் கொள்கிறார் (யோபு 34:14). ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை (பிரசங்கி 8:8).
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார் (ஆதி 2:7a). ஆதி மனிதன் தேவனுடைய கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும் போது சாகவே சாவீர்கள் என்ற வார்த்தையின் படி சரீரத்தில் அல்ல… ’ஆவி’க்குரிய மரணமடைந்தான். அந்த நிலையே சந்ததி சந்ததியாக இன்று வரையும் தொடர்கிறது. இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள் என்கிறார் தாவீது (சங். 51:5).
ஆனால், ஒருவர் குறித்த காலத்தில் தேவனுடைய கிருபையினால் மீட்பின் பலியாக இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் இரட்சிக்கப்படும் போது, ஆவியில் ‘உயிர்ப்பு’ அடைகிறார் (எபேசியர் 2:1-8, தீத்து 3:4,5). கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ‘ஆவி’யானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும் (ரோமர் 8:10). இந்த ’உள்ளான மனுஷன்’ நாளுக்கு நாள் புதிதாக்கப்படும் போது (2 கொரி 4:16), நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே ’நம்முடைய ஆவி’யுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார் (ரோமர் 8:16).
ஆத்துமா (Soul):
நாம் வழக்கமாக ஒரு சரீரத்தை வைத்து ஒரு மனிதனை அடையாளப்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் அவன் ஒரு ஆத்துமாவாக அடையாளப்படுத்தப்படுகிறான் (யாத். 31:14). தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7). எனவே தான் நாம் ஒருவரை ஆண்டவரிடம் நடத்துவதை ’ஆத்தும ஆதாயம்’ செய்தல் என்கிறோம் (நீதி 11:30).
ஆத்துமா என்பது ஒருவருடைய இருதயம், மனம் (சிந்தை), ஆவி என்பவைகளிலிருந்து வேறுபட்ட ஒன்று. அது சரீரப் பிரகாரமாக ஒருவர் (முதலாம்) மரணமடையும் போது அவருடைய சரீரத்திலிருந்து பிரிந்து செல்கிறது (ஆதி 27:4; 35:18). ஆத்துமாவுக்கு அழிவு இல்லை. அது நித்தியமானது. இவ்வுலக வாழ்க்கையில் தேவனை அறிந்து இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்ததையும் கீழ்ப்படியாததையும் பொறுத்து அந்த ஆத்துமாவுக்கு நித்திய அக்கினி (இரண்டாம் மரணம்) அல்லது நித்திய இழைப்பாறுதல் கிடைக்கிறது (2 தெச. 1:6,10).
சரீரம் (Body):
தேவன்: ’நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக’ என்று சொல்லி… தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். எனவே ஆதி மனிதனின் சரீரம் பாவம் நிறைந்தாக இருக்கவில்லை. அவனது வீழ்ச்சிக்குப் பின்னர் அவனும் தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே (ஆதி. 5:3) குமாரர்களைப் பெறுவதால், அவனது சந்ததியும் பாவ சரீரம் உடையாதாக இருக்கிறது. அதன் அயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது (சங். 90:10).
ஆனால் இந்த அற்ப ஆயுள் உள்ள சரீரத்தில் இருக்கும்போதே உள்ள ஒருவரின் இவ்வுலக வாழ்க்கை தான் அவரின் நித்தியத்தை நிர்ணயிக்கிறது. அதில் குடிகொண்டிருக்கும் பாவம் அசுத்தத்திற்கும் பரிசுத்தத்திற்கும் இடையில் அவனை நித்தமும் அலைக்கழிக்கிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? (ரோமர் 7:24) என புலம்பும் மனிதர்களுக்கு மத்தியில் கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே (ரோமர் 8:2) என்று பவுலைப் போன்று சாட்சி பகரும் பலர் உள்ளனர்.
முற்றிலும் (Wholly):
சரீரத்தின் ஒரு அவயவம் கெட்டதாக இருப்பினும் முழு சரீரமும் நரகத்திற்கே தள்ளப்பட ஏதுவாகிறது என்றார் இயேசு. அவ்விதமே ஆவி ஆத்துமா சரீரம் என்ற ஒரு மனிதனின் ஒரு அம்சம் பழுதடைந்தாலும் அவன் நித்திய அக்கினிக்கே அது தீர்க்கப்படுவான். நித்தியஜீவனை சுதந்தரிக்க வேண்டுமெனில் நம் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து (நியாயந்தீர்க்க) வரும்போது (வரும்வரை) குற்றமற்றதாக காக்கப்பட வேண்டியது அவசியம். ஆவி ஆத்துமா சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணித்து வாழும்போது சமாதானத்தின் தேவன் தாமே நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்க வல்லவராக இருக்கிறார். வழுவாதபடி நம்மைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே நம்மை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும் அவரே (யூதா 24,25). அவருக்கு நமது முழுமையையும் அர்ப்பணிப்போமா?