பாலுறவுப் பிரச்சினைகள்

போட்டித் தேர்வுகளில் ஆரம்பிக்கும் ஒரு மேல்நிலைப்பள்ளி கல்லூரி மாணவனின் படிப்பு வாழ்க்கை என்பது தொடர்ச்சியாக போட்டி மற்றும் பொறாமை, ஏமாற்று மற்றும் ஏமாற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பலவித பிரச்சினைகளினால் ஒருவித அழுத்தம் நிறைந்த கட்டத்திற்கு நேராகவே பயணிக்கிறது. இந்த வேளையில் வாலிபத்தின் பருவநிலை காரணமாக அவன் சந்திக்கும் சில பாலுறவுப் பிரச்சினைகள் அவனை எளிதில் திசைதிருப்பி, பொழுதுபோக்காக அழுத்தங்களிலிருந்து தற்காலிக தீர்வு தருவதாக அமைந்தாலும் இறுதியில் அவையே கண்ணியாக அமைகின்றன.

இந்தியாவின் எதிர்கால‌ம் இளைஞ‌ர்க‌ளின் கையில் என்பர்; ஆனால் இத்த‌கைய‌ இளைஞ‌ர்க‌ளின் இன்றையகால‌ம் எதன் கையில்? இன்று மாணவர்கள் மத்தியில் ‘செக்ஸ்’ என்பது மிகவும் பிடித்துப் போன ’சப்ஜெக்ட்’ ஆகி விட்டது. ஊடகங்களிலும் கூட விளம்பரங்கள் முதல் காட்சிகள் வரை ‘கவர்ச்சிகள்’ இல்லாத நிலையைக் காண்பது என்பது மிகவும் அரிதாகி விட்டது.

காதலும் காமமும்

எதிர்பாலருடன் காதல் உணர்வு அடைவது ஒன்றும் தன்னகத்தே தவறான விஷயம் அல்ல. ஏனெனில் மனிதனைப் படைத்த தேவன் தான், மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கண்டு, அவனுக்கு ஏற்ற துணையை உருவாக்கினார்’ (ஆதி. 2:18). ஆனால் காதல் உறவில் இருவரும் ஒரே நிலையில் ஒத்துவரும் பட்சத்தில் மட்டுமே அது இருவருக்கும் ஆக்கப்பூர்வமான உறவாக திருமணத்தில் நீடிக்கிறது. ஒத்துவராத பட்சத்தில் அது ஒருதலையாகவோ அல்லது இருவருமோ வெறும் பாலியல் விருப்பங்களுக்காகவே அடுத்தவரை நாடும் காமம் வகை ஆகிறது. இந்த விஷப்பரீட்சைக்கு படிக்கும் காலம் உகந்ததல்ல. 

காதல் உறவில் ஒருவர் முதல் பார்வையிலே விழுந்து விடுவதில்லை; முதல் பார்வை தவறல்ல; தவறான இச்சை நோக்குடன் கூடிய அடுத்தடுத்த பார்வைகள் தான் தவறு. பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும் (யாக்கோபு 1:15). காதல் வலையில் சிக்கியோர் பலர் தங்களையும் அறியாமல் சிக்கிக் கொள்ளும் அடுத்த வலை தான் பாலுறவு. திரும‌ண‌ம் வ‌ரை பாலுற‌வைத் த‌விர்ப்ப‌து என்பது அனைத்து வழிகளிலும் பயன் தரக்கூடியது. அதுவே நம்மைக் குறித்த தேவனின் திட்டமும் கூட (எபி. 13:4).

ஒளிமயமான எதிர்காலம் காதல் திருமணத்திலா அல்லது பெற்றோர் மற்றும் பெரியவர்கள் தீர்மானிக்கும் திருமணத்திலா என்பது போன்ற விவாதங்கள் தற்போது படிக்கும் காலத்தில் தேவையில்லை. பெற்றோரின் விருப்பமின்றி திருமணத் துணையை நானாக தேர்ந்தெடுக்க முயற்சிக்க மாட்டேன் என்ற தீர்மானத்தை ஒருவன் எடுத்தால், அது அவன் படிக்கும் காலத்தில் பாலுறவு பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, தனது படிப்பில் கவனம் செலுத்த மிகவும் உதவும்.

பாசமும் ஆபாசமும்

எதிர்பாலரின் பாசத்தை எதிர்பார்த்து ஏங்கியிருப்போர் அதனை ஒருவித மாயையான நிலையில் ஆபாசத்தில் அனுபவிக்க முயல்கின்றனர். ஒருவரின் பாலியல் உணர்வுகளைத் தூண்டுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்ட கலை இலக்கிய வடிவங்கள் அனைத்தும் ஆபாசங்களாக வரையறுக்கப்படுகின்றன. வாசிக்கும் ஆபாசக் கதைகள், பேசும் அல்லது கேட்கும் ஆபாசப் பேச்சுக்கள், பார்க்கும் ஆபாசப் படங்கள் என இவை அனைத்தும் கையடக்க மொபைல் போனிலேயே வலிய வந்து சேர்வதால் இன்று மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இவற்றினால் தனிமையில் காம விகார சிந்தைகள், சுயஇன்ப பழக்கத்தினால் வந்து சேரும் குற்ற உணர்வு இவை அனைத்தும் படிப்பில் சிந்தையைத் தடுக்கின்றன. ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று (மத். 5:28) என்றார் இயேசு. வெளியில் நேரடியாக ஒருவரை பார்க்கும் போது மட்டுமல்ல, அந்தரங்கத்தில் ஆபாசத்தில், குறிப்பாக முகநூலில் எதிர்பாலரின் முகங்களைக் கண்டு லயிப்பதற்கும் இந்த வசனம் பொருந்தும்.

ஒருபாலரும் எதிர்பாலரும்

பாலுறவுப் பிரச்சினைகள் என்பது எதிர் பாலருடன் மட்டுமே ஏற்படுபவை என தவறாக நினைத்து தவறிப் போக வேண்டாம். மாணவர்கள் தங்கள் எதிர்பாலருடம் சரியான அளவில் நட்புகொள்ள பக்குவப்பட வேண்டும். இல்லையெனில் அது ஒருபாலின ஈர்ப்புக்கு வழிவகுத்து ஓரினச்சேர்க்கைக்கும் வழிவகுக்கும். சிறுவயது வளர்ப்பு அனுபவங்கள் மற்றும் நாம் வாழும் கலாச்சாரம் இவை Gay, Lesbian போன்ற ஓரின உறவுநிலைக்கு முக்கிய காரணிகளாக அமைகின்றன. திருமணத்திற்கு முன் பாலுறவு போன்றே ஒருபாலின ஈர்ப்பும் தவறாகும். எனவே முதல்வகை தவறுக்கு வாய்ப்பில்லாத நிலையில் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் இரண்டாம் வகை தவறில் எளிதாக சிக்கிக் கொள்கின்றனர். கல்லூரி வாழ்க்கையில் எதிர்பாலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு தவிர்க்க இயலாதது. இருப்பினும் விசுவாச மாணவர்கள் இதில் கவனத்துடன் இருந்து எதிர்பாலருடன் ’நெருங்கிப்’ பழகுவதை தவிக்க வேண்டும். எதிர்பாலரை தொட்டுப் பேசுதல், தனிமையில் சந்தித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

அனுபவ ஆலோசனைகள்

மாணவர் பருவத்தில் ஒருவர் சந்திக்கும் பாலுறவு பிரச்சினைகளுக்கு அதுசார்ந்த தவறான நோக்கமும் சரியான நேரமேலாண்மையின்மையும் முக்கிய காரணங்கள் ஆகும். காதலிக்க நேரமில்லை என திட்டமாய் கூறும் மாணவரால்  தான் படிக்க நேரமில்லை என புலம்பாமல் இருக்க முடியும். படிப்பினால் ஒருவர் தனது சிந்தனைகளை கட்டுக்குள் வைத்திருப்பதைக் காட்டிலும் அதற்கு மேலாக வேதவாசிப்பு தனிஜெபம் போன்ற கிறிஸ்தவ ஒழுங்குகளில் முறையாக நேரத்தை செலவிடும் போது, மனம் புதிதாகி அவர் மறுரூபம் ஆவது உறுதி.

விசுவாச மாணவர்கள் தங்கள் சகமாணவர்களுக்கு இயேசுவை அறிவிக்கும் நற்செய்தி பணியில் ஈடுபடும்போது பாலுறவு சார்ந்த தங்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்திட அது வாய்ப்பளிக்கிறது. பொறுப்பான பட்தாரிகளின் பார்வையில் எதிர்பாலருடன் இணைந்து ஊழியங்களில் ஈடுபடும் பொழுது எதிர்பாலர் உறவுகளில் ஒரு சமநிலையான முதிர்ச்சி கிடைக்கும் வாய்ப்புண்டு. விசுவாச மாணவரே இவற்றை முறையாக பயன்படுத்துவீர்களா?

அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. II தீமோத்தேயு 2:22.
Tags: