நிறைவான அன்பு

உலகில் மனிதன் மட்டுமல்ல, உயிருள்ள அனைத்துமே அன்புக்காக ஏங்கி அலைகின்றன. அன்பு என்பது மனிதனுக்கு ஒரு அடிப்படைத் தேவையாக உள்ளது. ஒருவன் தனது தனிமையையும் இயலாமையையும் உணரும் போது அவன் உடல், மனம், அறிவு ரீதியாக அடுத்தவருடைய உதவியை நாடவேண்டிய நிலையில் இருக்கிறான். பிறந்த குழந்தையாக பெற்றோரின் பாசம், வளரும் போது சகோதர சகோதரிகள் மற்றும் ஒத்த வயதுடையோரின் நட்பு, வாலிபப் பருவத்தில் எதிர்பாலருடன் காதல் என ஒருவர் ஏங்கும் அன்பு பல விதங்களில் வடிவம் பெறுகிறது. காலங்கள் மாறினாலும் பருவங்கள் மாறினாலும் மாறாத இன்னுமொரு அன்பு, அது தெய்வீக அன்பு. 

கடவுள் அன்பாகவே இருக்கிறார் (God is Love) என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மறுக்க முடியாத உண்மை. அதையே ஒரு உச்சமாக அன்பே கடவுள் (Love is God) என்றாலும் தகும்; அந்த அளவிற்கு கடவுள் அன்பானவர். ஆனால் அன்பு என்ற தத்துவத்தை என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களால் கடவுளையும் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது. குறிப்பாக அன்பு என்றால் எதிர்பாலருடன் காதல் என்ற ஒற்றை இலக்கணத்துடன் உற்று நோக்கும் இளைஞர் வட்டங்களுக்கு அன்பின் உருவமான கடவுள் ஒரு புதிராகவும் பல வேளைகளில் எட்டிக்காய் போன்று கசப்பாகவும் இருக்கிறார். இந்த நிலைமையை சரிசெய்துகொள்ள இளைஞர்களாகிய நாம் அன்பினை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். 

அன்பு பலவிதம்: அன்பு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Love என்ற ஒரே ஒரு வார்த்தை இருப்பினும் அது பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான காரியங்களைக் குறிக்கும். அன்பிற்கு பலரும் பலவிதமான வரையறைகளும் வகைப்பாடுகளையும் விளக்கங்களும் கூறினாலும், அவற்றை பின்வருமாறு குறைந்தபட்சமாக நான்கு விதமான கிரேக்க பதங்களில் வகைப்படுத்தலாம். அவை: 1) Storge எனப்படும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயான பாசம் (affection),  2) Philia எனப்படும் சகமனிதர்களிடையே நிலவும் சகோதர நட்பு (friendship), 3) Eros எனப்படும் இருபாலருக்கிடையேயான காதல் (erotic love),  4) Agape எனப்படும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தெய்வீக அன்பு (Love of God). பைபிள் எனப்படும் பரிசுத்த வேதாகமத்தில் அனைத்து வித அன்பினைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், எந்த நிலையிலும் மாறாத உச்சநிலை அன்பு என்பது கடவுள் மனிதன் மீது பொழியும் Agape அன்பாக இருப்பதால் அதைக் குறித்தே அதிகமாக பேசுகிறது.

அன்பின் குணாதிசயங்கள்: அன்பின் உருவமாக கடவுள் இருப்பதால் பைபிள் முழுவதுமே அந்த அன்பைக் குறித்து நாம் விளங்கிக் கொள்வதாக இருந்தாலும் அன்பின் குணாதிசயங்களைக் இரத்தினச் சுருக்கமாக 1 கொரிந்தியர் 13: 4 முதல் 8 வசனங்களில் காண்கிறோம். இது மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்கள் வரையிலான இயேசு கிறிஸ்துவின் நீண்ட மலைப்பிரசங்கத்தின் சுருக்கமான வரையறை எனவும் கொள்ளலாம். இந்த குணாதிசயங்களை அன்பினிடத்தில் உள்ள நேர்மறையான 8 காரியங்களாகவும் அன்பினிடத்தில் இல்லாத  எதிர்மறையான 8 காரியங்களாகவும் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்.

அன்பினிடத்தில் உள்ள நேர்மறையான விஷயங்கள்:

  1. நீடிய சாந்தமுள்ளது 
  2. தயவுமுள்ளது 
  3. சத்தியத்தில் சந்தோஷப்படும்
  4. சகலத்தையும் தாங்கும் 
  5. சகலத்தையும் விசுவாசிக்கும் 
  6. சகலத்தையும் நம்பும் 
  7. சகலத்தையும் சகிக்கும்
  8. அன்பு ஒருக்காலும் ஒழியாது.

 

அன்பினிடத்தில் இல்லாத எதிர்மறையான விஷயங்கள்:

  1. அன்புக்குப் பொறாமையில்லை
  2. அன்பு தன்னைப் புகழாது 
  3. இறுமாப்பாயிராது
  4. அயோக்கியமானதைச் செய்யாது 
  5. தற்பொழிவை நாடாது 
  6. சினமடையாது 
  7. தீங்கு நினையாது
  8. அநியாயத்தில் சந்தோஷப்படாது

சி.எஸ். லூயிஸ் என்னும் எழுத்தாளர் தனது ‘Four Loves’ என்னும் நூலில் அன்பினைக் குறித்து கிறிஸ்தவ மற்றும் தத்துவக் கோணங்களில் விவாதிக்கிறார். அதில் பாசம், நட்பு, காதல் என்னும் மூன்று வகையான அன்பும் எந்த அளவிற்கு (தலை)வலி தரும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது எனவும் தேவ அன்பு எவ்விதம் அந்த அனைத்து அன்பையும் ஓர் உயிரூட்டமுள்ளதாக்க முடியும் எனவும் அவர் விளக்குகிறார். அதன்படி பொதுவாக அன்பினை கொடுக்கும் அன்பு (gift love), எதிர்பார்க்கும் அன்பு (need love), நன்றிகலந்த அன்பு (appreciative love) என வகைப்படுத்திப் பார்க்கும் போது அதனை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். 

காதல் அன்பு: எதிர்பாலருடன் காதல் உணர்வோ, கணவன் மனைவி உறவுமுறைகளோ அதனகத்தே ஒன்றும் தவறான விஷயங்கள் அல்ல. மனிதனைப் படைத்த இறைவன் தான், மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று கண்டு, அவனுக்கு ஏற்ற துணையை உருவாக்கினார் (ஆதி. 2:18). காதல் உணர்வு அடிப்படையில் ஓர் எதிர்பார்க்கும் அன்பு. அதற்காக காதல் என்றாலே அது பாலியல் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நடைமுறை என அதனை தவறாக புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உண்மையான காதல் பாலுறவை அல்ல, காதலரையே விரும்பும். காதல் உறவில் இருவரும் ஒரே நிலையில் ஒத்துவரும் பட்சத்தில் மட்டுமே அது இருவருக்கும் ஆக்கப்பூர்வமான உறவாக திருமணத்தில் நீடிக்கிறது.

ஒத்துவராத பட்சத்தில் அது ஒருதலையாகவோ அல்லது இருவருமோ வெறும் பாலியல் விருப்பங்களுக்காகவே அடுத்தவரை நாடுவது போன்றதாகி விடுகிறது. பெரும்பாலும் காதல்கள் ஓர் எதிர்பார்க்கும் அன்பாக இருப்பதால்,  பரஸ்பரம் நேர்மையான அன்புடன் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கு முன்னரே அறிந்தோ அறியாமலோ இடையில் பாலியல் சார்ந்த விருப்பங்கள் தலைதூக்கி விடுகின்றன. இதனால் அது தோல்வியில் முடிவது மட்டுமல்ல; அன்பின் குணாதிசயங்களாக மேலே பட்டியலிடப்பட்ட காரியங்களுக்கு நேரெதிரானதாகவும் அது வெளிப்பட்டு விடுகிறது. எனவே காதல் அன்பு ஒரு பூரணமான அன்பு அல்ல. 

தெய்வீக அன்பு: கடவுள் மனிதன் மீது காட்டும் அன்பு ஒரு கொடுக்கும் அன்பு. அது நிபந்தனையற்ற அன்புமட்டுமல்ல, தகுதியற்றவர்களின் மீதும் காட்டப்படும் அன்பு. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). அதுவே உச்சபட்ச அன்பு. தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15:13). அது ஒரு நித்திய அன்பு. இயேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார் (யோவான் 13:1).

மனிதர்களின் பாவ விமோச்சனத்திற்காக சிலுவையில் மரித்த இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து அவரை தங்கள் மீட்பராய் ஏற்றுக்கொண்டவர்கள் அத்தனை பேரும் கடவுளின் பிள்ளைகளாகின்றனர். அவரும் அவர்களில் தங்கி அவர்களை வழிநடத்துகிறார். நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது என்கிறார் இயேசுகிறிஸ்து (யோவான் 15:12). அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் (I யோவான் 3:16). அந்த அன்பை புரிந்து கொண்டவர்களால்  மற்றவர்களிடமும் நேர்மையாக அன்பு செலுத்த / அன்பை எதிர்பார்க்க முடியும். கள்ளம் கபடமற்ற நிறைவான அன்பாகிய தெய்வீக அன்பை அனுபவிக்க நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது பாசம், நட்பு, காதல் என்ற கட்டங்களையெல்லாம் சமநிலையுடன் கடந்து நிம்மதியாக வாழ முடியும். அதற்கு ஆயத்தமா?