23 Dec அற்புதமா? அற்புதரா?
நாளுக்கு நாள் முன்னேறும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப மருத்துவத்துறையில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் வைத்தியருக்கு அடங்காத விதவிதமான வியாதிகள் காலாகாலங்களில் தலைதூக்கிக் கொள்கின்றன. ஒருவனுக்கு வரும் வியாதிகளுக்கு யார் காரணம் என அலசிப் பார்த்தால் இருதரப்பினரை மட்டும் கொண்டு அல்ல; பலதரப்பினரைக் கொண்ட ஒரு முற்றுப் பெறா பட்டிமன்றமே நடத்திவிடலாம்.
நாம் வாழும் உலகம் நிலையில்லா ஒன்றாக இருப்பினும் இருக்கும் நாள் வரை நலமுடன் வாழவே அனைவரும் விரும்புகிறோம். நம்மைப் படைத்தவரின் எண்ணமும் அதுவே. வியாதிகளுக்கு காரணம் எதுவாயிருந்தாலும் அவை தீருவதே காரியம் என்ற ஒற்றை நோக்கத்துடன் வந்த வியாதியை வென்று நலமடைய நாடுவதில் பலரும் பலவிதமான முயற்சிகளில் முடிந்த அளவு ஈடுபடுகின்றனர். தங்கள் அனுபவம் மற்றும் வசதிவாய்ப்புக்களைப் பொறுத்து பலவிதமான சிகிச்சைகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். சிலர் எதற்கெடுத்தாலும் மருத்துவரையும் சிலர் அனைத்திற்குமே ஆண்டவரையும் என இருவேறு துருவங்கள் வரையிலும் உள்ள பல்வேறு நிலைகளில் பலரும் செயல்படுகின்றனர்.
வந்த வியாதி நீங்கிட நமக்குத் தேவை மருத்துவ சுகமா? தெய்வீக (அற்புத) சுகமா? என்ற விவாதத்தில் இரு தரப்பு கொள்கையினருமே கூட்டிக்கழித்துப் பார்த்தால், இறுதியில் ’உடல்நலம்’ என்ற சுயநலம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். கிறிஸ்தவ வட்டாரத்தில் அவ்வப்போது தலைதூக்கும் இந்த விவாதத்தில் ஒன்றைக் காட்டிலும் ஒன்றை உயர்ந்தது என்றோ தாழ்ந்தது என்றோ முத்திரைக் குத்திவிட இயலாது. இருதரப்பினருமே இறுதியில், தான் உடலளவில் நலமாயிருந்தால் சரி என்ற சுயநல நோக்கிலேயே அவ்விதம் செயல்பட்டு மருத்துவருக்கு அவருக்கான சேவைக் கட்டணத்தையும் தேவனுக்கோ அதற்கான ஒரு நன்றிக்காணிக்கையையும் படைத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதாலும், சுகம் பெறும் தனது தரப்பு முறையில் தொய்வு ஏற்படும்போது அதனை எதிர்த்து, கேள்வி கேட்க இருதரப்பினருமே துணிவு கொள்வதால், தனது தரப்பு தனது தரப்பே சரியென உரிமை கொண்டாட இருதரப்பினருக்குமே அருகதை இல்லை! இருப்பினும் வசதி படைத்தவர்கள் வியாதி வந்து சேர்ந்த வேகத்திலேயே மருத்துவரிடம் தஞ்சமடைவதையும் வசதியில்லா பரம ஏழைகள் உட்பட இன்னும் வெகுசிலர் இதற்காக பரமன் பாதத்தில் விழுந்து கெஞ்சி வியாதியிலிருந்து விடுதலை பெறுவதையும் அதன் பின்னரே அவரிடம் நெருங்கி வருவதையும் பார்க்கும் போது தெய்வீக சுகமே மேலானது என்ற கூற்றை நாம் மறுப்பதற்கில்லை.
அனால் அந்த தெய்வீக சுகத்தைக் குறித்த போதனைகளின் தான் எத்தனை முரண்பாடுகள். மட்டுமல்ல, கிறிஸ்தவ ஊடகங்களில் மட்டுமே அறிவிக்கப்படும் தெய்வீகசுக சாட்சிகளோ பெரும்பாலும் அந்த சுகமடைந்த சூழ்நிலையும் முறையும் மட்டுமே அவைகளை வாசிப்போர் மனதில் தெளிவாகப் பதிந்து, பரிகாரியான கர்த்தரை பக்குவமாக மற(றை)க்கும் விதங்களில் அமைகின்றன. வாசிப்போரும் பலர், இதுபோல் நமக்கும் நடந்து விடாதா என்ற ஏக்கத்தில், தெய்வீக சுகம் என்ற போர்வையில் தேவனை அல்ல தேவமனிதரையே நாடி அலைகின்றனர்.
இவ்விதம் அற்புத சுகத்தைப் பற்றிய பல்வேறு தரப்பட்ட கருத்துக்கள் சச்சரவுகள் நாள்தோறும் பெருகி வரும் வேளையில், அதனை அலசிப்பார்த்து அதில் எது முக்கியம்? அற்புதமா? அற்புதரா? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதற்கு ஆதாரமாக மாற்கு 5:21-43 பகுதியை மனதில் கொள்வோம். இங்கு நடைபெறுவது இரண்டு அற்புத சுகம் பெறும் நிகழ்வுகள். ஒன்றன் பின் ஒன்று அல்ல… ஒன்றின் ஊடே ஒன்று. ஒன்றுக்காகவே அந்த ஒன்று என்றும் கூட சொல்ல முடியும். எனவே இவற்றை இங்கே உற்று நோக்குவோம்.
ஒன்று யவீரு என்னும் ஜெப ஆலயத்தலைவனின் பன்னிரண்டு வயது மகள், மரித்துப் போய் பின்னர் உயிரடைந்தது. மற்றொன்று பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடு என்னும் பெண்களுக்கான உதிரப்போக்கு வியாதியால் தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் வருந்திய ஒரு ஸ்திரீ இயேசுவின் வஸ்திரத்தை தொட்டே ஆரோக்கியமடைந்தது. இவ்விரு அற்புத சுகங்களிலும் இவை நடக்கும் முன்னர், நடக்கும் போது, நடந்த பின்னர் இவை இரண்டிற்குமிடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளிலிருந்து நாம் தெய்வீக சுகம் குறித்த தெளிவு பெற முடியும்.
அற்புத(சுக)த்திற்கு முன்னர்:
ஒற்றுமைகள்:
- யவீருவின் மகளுக்கு வயது பன்னிரண்டு; இந்த ஸிதிரீக்கும் பெரும்பாடு பன்னிரண்டு வருடங்களாக இருந்தது.
- இயேசுவிடம் வந்த இருவருமே அவசர கேஸ்களே. ஒன்று மரண அவஸ்தை அவசரம். மற்றொன்று மருத்துவர்களால் கைவிடப்பட்டதினால், இதுவே இறுதி வாய்ப்பு. இவரை இப்போது விட்டால் வேறு வழியில்லை.
வேற்றுமைகள்:
- ஒருவர் தனது மகளுக்காக வேண்டுதல் செய்கிறார். மற்றொருவர் தனக்காக செயல்படுகிறார்.
- ஒருவர் ஜெப ஆலயத் தலைவன் என்ற அந்தஸ்து படைத்தவர். மற்றொருவர் தனது பெரும்பாடு வியாதினால் ஜெப ஆலயத்திற்குள் நுழையவும் தகுதியில்லாதவர்.
- ’அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்’ எனது யவீருவின் விசுவாசம். ’நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன்’ என்பது அந்த ஸ்திரீயின் விசுவாசம்.
- யவீரு இயேசுவைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்தான். அந்த ஸ்திரீ ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
- யவீரு அவர் பாதத்திலே விழுந்து அவரை மிகவும் வேண்டிக் கொண்டான். அந்த ஸ்திரீயோ எவ்வித வேண்டுதலையும் ஏறெடுக்கவில்லை.
அற்புத சுகத்தின் போது:
ஒற்றுமைகள்:
- இயேசு சிறுபிள்ளையின் கையைப்பிடித்து, ‘தலீத்தாகூமி’ என்று சொன்ன ’உடனே’ அந்த சிறுபெண் எழுந்து நடந்தாள். அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட ’உடனே’ அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று.
- ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்றும் ஸ்திரீயைப் பார்த்து: பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றும் கூறினார். இவ்விரண்டிலும் விசுவாசமே அற்புத சுகத்தின் அடிப்படை.
வேற்றுமைகள்:
- ’சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்’ என்று இயேசு சொன்ன பின்னரே அந்த சிறுபெண் எழுந்தாள். ஆனால், அற்புத சுகம் நடந்த பின்னரே அந்த ஸ்திரீயை நோக்கி, ’நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு’ என்று இயேசு கூறினார்.
- சிறுபெண்ணை எழுப்பின அற்புதத்தில் அதனைக் காண, தன்னுடன் அங்கு ஐந்து பேர் மட்டுமே இருக்கும்படி இயேசு பார்த்துக் கொண்டார். இந்த ஸ்திரீ திரளான ஜனங்கள் நடுவில் சுகத்தைப் பெற்றுக் கொண்டாள்.
அற்புத சுகத்திற்கு பின்னர்:
வேற்றுமைகள்:
- யவீருவின் வீட்டார் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அந்த ஸ்திரீ அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசுவும் தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்தார்.
- சிறுபெண் உயிரோடெழுந்த அற்புதத்தில் அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். ஆனால் ஸ்திரீ அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவளும் இயேசுவும் மட்டுமே உணர்ந்திருந்த அந்த மறைவான அற்புத சுகத்தை இயேசுவே வெளிப்படையாக்கி விட்டார்.
- உயிர்த்து எழுந்த சிறுபெண்ணிற்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார். இதுவே அந்த அற்புதத்தின் நிரூபணம். அந்த ஸ்திரீ ஆரோக்கியமடைந்ததை அவளால் ’உணர’ முடிந்தது. மருத்துவராகிலும் அதனை உறுதி செய்ததாக சொல்லப்படவில்லை.
இவ்விதம் இவ்விரு அற்புதங்களையும் உற்று நோக்கிய பின்னர் உங்கள் உள்ளத்திலும் பல்வேறு சிந்தனைகள் இப்போது எழுந்திருக்கக் கூடும். வியாதிகள் பலவிதம். விடுதலை தருபவர் ஒன்றே. அவரால், அவசர கேஸ்களை மட்டுமல்ல நாள்பட்ட வியாதிகளையும் போக்க முடியும். கேன்சர் போன்ற பெரிய வியாதிகளுக்கு மட்டுமல்ல தலைவலிக்கும் அவரிடத்தில் அற்புத மருந்து உண்டு. காணிக்கைப் பொருத்தனை செய்து கொண்டால் சரியாகிவிடுமா அல்லது பொருத்தனைக் காணிக்கை செலுத்திவிட்டால் சரியாகிவிடுமா அல்லது சரியான பின்னர் (அல்லது சரியானால் மட்டும்???) பொருத்தனைக் காணிக்கை செலுத்துவதா என்ற குழப்பமெல்லாம் அவசியமே இல்லை. பரிகாரியான கர்த்தர் மீதுள்ள நமது விசுவாசமே காரியம்.
இயேசு தன்னுடன் பன்னிரு சீடர்களை தெரிவுசெய்து அவர்களுக்கு தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். அதாவது அந்த பன்னிருவருக்கும் குணமாக்கும் வரம் இருந்தது எனலாம். குணமாக்கும் வரம் என்பது ஆவியின் வரங்களில் ஒன்று. இந்நாட்களில் அது எல்லாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை (1 கொரி 12: 9,30). அந்த வரம் உடைய ஒருவர் இல்லாத ஒருவரை குறைவாக மதிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே (1 கொரி 12: 4-6).
மருத்துவரால் கைவிடப்பட்ட பின்னர் இயேசுவால் சுகமடைந்தால் ஒன்றும் அது பெரிய அற்புதமல்ல. அவரால் முடியாதது தான் ஒன்றுமில்லயே. நமக்கும் வேறு வழியில்லை என இறுதியில் அவரிடம் செல்கிறோம். ஒருவேளை அவருக்கு சித்தமின்மையால் அங்கு நாம் எதிர்பார்த்த அற்புதம் நடைபெறவில்லை எனில் வீண்பழி அவர் மீது தான் வந்து சேரும். ஆனால், மருத்துவரை நாடாமல், இயேசுவையே முழுமையாக நம்பிவிட்டு, இறுதியில், அவருடைய சித்தமின்மையால், அந்த அற்புதம் நடக்கவில்லையெனில், மற்றவர்களின் பழிச்சொல் நம்மீதும் தான். அவர்மீது மட்டுமல்ல. எனவே இரண்டையும் முயற்சிப்பதில் தவறு இல்லையே. வேதாகமத்தில் மருத்துவசுக பிரியர்களை இயேசுவும் எதிர்க்கவில்லையே.
தனது வல்லமையான போதனைகள் மற்றும் செய்கைகளினால் அநேகரை ஆச்சரியப்படுத்திய இயேசு கிறிஸ்து, தனது உலக வாழ்க்கையில் இருமுறை மட்டுமே, தான் ஆச்சரியப்பட்டதாக வேதாகமக் குறிப்பு உள்ளது. இரண்டுமே விசுவாசத்தைக் குறித்து தான். ஒன்று தான் வளந்த ஊராரின் அவிசுவாசத்தைக் கண்டு (மத் 6:8 / மாற்கு 6:6) மற்றொன்று நூற்றுக்கு அதிபதியின் பெரிதான விசுவாசத்தைக் கண்டு (மத் 8:10 / லூக் 7:9). இங்கு இயேசு குறிப்பிடும் விசுவாசம் என்பது என்ன? தனது நான் எப்படியாகிலும் குணமடைந்து விடுவேன் என்ற தளராத நம்பிக்கையா? இல்லவே இல்லை. அதனை சற்றே உற்று நோக்குவோம்.
இஸ்ரவேலருக்குள்ளும் இல்லாத நூற்றுக்கு அதிபதியின் பெரிதான விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த இயேசுகிறிஸ்து ‘உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது’ என்று கானானிய ஸ்திரியைப் பார்த்து கூறிய நிகழ்வையும் (மத் 15:22-28) மேற்கண்ட பகுதிகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, விசுவாசத்தின் இலக்கணம் வெளிப்படுகிறது. இன மத ஜாதி வேறுபாடுகளின்றி ’இயேசுகிறிஸ்து அகில உலக இரட்சகர்’ என்பதே அந்த விசுவாசம்.
தன்மீதுள்ள ஒருவரின் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணவே இன்னொருவருக்கு தேவன் அற்புதத்தை செய்கிறார். ஆனால், இந்நாட்களில் அற்புத சுகம் நடந்த பின்னர் பெரும்பாலானோருக்கு விசுவாசம் யார் மீது வருகிறது? என்ன விசுவாசம் வருகிறது? என்பதையெல்லாம் நடைமுறையில் பார்க்கும் போது தெய்வீக சுகத்தின் அடிப்படை நோக்கமே ஆட்டம் காண்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
நீ விசுவாசித்தால் தேவமகிமையைக் காண்பாய் என்பது போன்ற இன்னும் பல வசனங்களை சுட்டிக் காட்டி நம்மில் பலர் தேவன் மீது அல்ல அந்த ’விசுவாசத்தின்’ மீது விசுவாசம் கொள்ளும் படி பலவந்தம் பண்ணப்படுகிறோம். நமது விசுவாசம் தேவன் மீது இருக்கவேண்டும். உடல் வியாதிகளிலிருந்து நம்மை விடுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மட்டுமல்ல; பாவ வியாதியிடமிருந்தும் விடுதலை பெற நாம் அவரை நாடவேண்டும் என்பதே ’அற்புத’ தேவனின் நோக்கம். நமக்கு தேவன் மீது விசுவாசம் இருப்பினும், நாம் எதிர்பாத்திருக்கும் அற்புத சுகம் நிச்சயம் நடக்கும் என்பதைக் காட்டிலும் அது அவருக்கு சித்தமானால் (மட்டுமே) நடக்கும் என்று விசுவாசிப்பதே பூரண விசுவாசம்.
’அங்கு’ சென்றால் நடந்து விடுமா? எனக்கும் ’அப்படியே’ நடந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு ஆதாரமில்லாத ஒன்று. நாம் அவரைத் தொட்டோ அல்லது அவர் நம்மைத் தொட்டோ குணமாக்குவது அவரது திருவுளச் சித்தமே. வியாதியின் மூலம் நாம் அவரை அல்லது அவர் நம்மை தொடும் அளவிற்கு நாம் அவரை நெருங்குகிறோமா என்பதே காரியம். நெருங்குவோமா?
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும் (யாக். 5:15)